இந்தியா என்ற பெயரை மாத்துங்க, அதுக்கு பதிலா இந்த பெயர் வைங்க... கங்கனா ரனாவத் பலே ஐடியா

இந்தியா என்ற நாட்டின் பெயருக்கு பதிலாக பாரத் என மாற்ற வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூகவலைதளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா என்ற பெயரை மாத்துங்க, அதுக்கு பதிலா இந்த பெயர் வைங்க... கங்கனா ரனாவத் பலே ஐடியா

அரசியல், சமூக சார்ந்த கருத்துக்களை சற்று காரசாரமாக முன் எடுத்து வைப்பவர் நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதையடுத்து கங்கனாவின் கணக்கை முடக்கியது டுவிட்டர் நிறுவனம்.

இதையடுத்து அவர், 'கூ' என்ற சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்,  நாட்டின் பெயரான இந்தியா என்ற பெயர் அடிமை பெயராக உள்ளது. எனவே அதை மாற்றி, நமது நாட்டின் பழைய பெயரான, பாரதம் என்பதையே வைக்க வேண்டும். 

நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், மேற்கத்திய உலகின் மலிவான நகலாக இல்லாமல், வேதங்கள், பகவத் கீதை மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடாக நாம் வெளிப்படுவோம் என்று கூறி இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா? என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார்.

இந்தியா என்ற அடிமைப் பெயரை, பிரிட்டிஷார் நமக்குக் கொடுத்தனர். அதாவது சிந்து நதியின் கிழக்குப் பகுதியைக் குறிக்கும் வகையில் இது தரப்பட்டது. இப்படியெல்லாமா பெயரை வைப்பார்கள்? பிஎச் (பவ்), ரா (ராக்), தா (தாள்) என்ற பெயர்கள் இணைந்ததே பாரதம். நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே நாம் கலாச்சாரம் மிகுந்தவர்களாகவும், நாகரீகம் மிக்கவர்களாகவும் இருந்தோம். எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.