
நடப்பு மாதம், 14ம் தேதி வரையிலான இரண்டு வாரங்களில், நாட்டின் ஏற்றுமதி, 46.43 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில் மொத்தம், 1.03 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலிய பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.ஏற்றுமதி மட்டுமின்றி, நாட்டின் இறக்குமதியும், இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இறக்குமதி, 98.33 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட, 1.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி ஆகியுள்ளன. நடப்பு மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் ஏற்றுமதி, 52.39 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில், 4.59 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி ஆகிஉள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில், 2.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியே நடந்துள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.