விவசாயிகளின் நலன் கருதி.. கர்நாடகா அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் - துரைமுருகன் உறுதி

மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் நலன் கருதி.. கர்நாடகா அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் - துரைமுருகன் உறுதி

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அணை கட்டுவதற்கென 2022-23 பட்ஜெட்டில் கர்நாடக  அரசு 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக பத்திரிகைகளில் தகவல் வெளியாகியுள்ளதென குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் உச்சநீதிமன்றத்தில் அதுதொடர்பான  வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கர்நாடகா அதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவதற்கும் முரணானது என கூறியுள்ளார். 

மேலும் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும், 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினையும் மதிக்காமல், தன்னிச்சையாக  பன்மாநில நதியான காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு நினைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.  

மாநிலங்களின் அனுமதி பெறாமல் மேகதாதுவில் அணைக்கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது எனவும் கூறியுள்ளார். 

அதுமட்டுமல்லாது சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே கர்நாடகா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தோன்றுவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழக விவசாயிகளின் நலன் கருதி மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசின் முயற்சியை அரசு தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.