நாகலாந்தில் பொதுமக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்...

நாகலாந்தில் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து மக்களவையில்  உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
நாகலாந்தில்  பொதுமக்கள் மீது ராணுவம் நடத்திய  துப்பாக்கிச்சூடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்...
Published on
Updated on
1 min read

நாகலாந்தில் நேற்று பொதுமக்கள் மீது ராணுவத்தினர் நடத்திய  துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் ராணுவம் மீது நடத்தியத் தாக்குதலில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

இந்நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்  நாகாலாந்தில் அமலில் உள்ள ஆயுதப்படையினருக்கான சிறப்புச் சட்டத்தை வாபஸ் பெற  வலியுறுத்தினர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.நாகலாந்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மக்களவையில் விளக்கமளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து ராணுவத்துக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன்பேரில் சந்தேகத்திற்குரிய பகுதியில் அவர்களை எதிர்கொள்ள 21 ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருந்ததாகவும் தெரிவித்தார். 

அந்த நேரத்தில் அப்பகுதியில் சோதனைச்சாவடியில் வந்த வாகனத்தை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறியதாகவும் ஆனால் உத்தரவை மீறி வேகமாக சென்றதால் சந்தேகத்தின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாதத்தில் அந்தக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் எனவும் அவர் கூறினார். நாகலாந்தில் தற்போது பதற்றமான சூழல் காணப்பட்டாலும் , நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய அவர், மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com