ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதி கோரி இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

கர்நாடக மாநிலம் உடுப்பியில் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற 6 இஸ்லாமிய மாணவிகள், வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் வகுப்பறைக்கு சீருடையில்தான் வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டதால், பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாணவிகள் தாங்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இதனிடையே பள்ளி மாணவர்கள் காவி துண்டை அணிந்து பள்ளிக்கு வர தொடங்கியதுடன், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாபை கழற்றினால் மட்டுமே, தாங்கள் காவி துண்டை கழற்றுவோம் எனவும் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் மாண்டியா, பாகல்கோட், உடுப்பி மாவட்டங்களில் இரு தரப்பினர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தில் கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியும் அரங்கேறியது.  
 
இந்நிலையில், மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா தீட்சித், இந்திய அரசியலமைப்பு சட்டம் மீது நம்பிக்கை வைத்து, பொதுமக்களும் மாணவர்களும் அமைதிகாக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். மேலும் சில விஷமிகள் மட்டுமே இந்த பிரச்சினையை வளர்க்கிறார்கள் என கடிந்துகொண்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 

இதனிடையே மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.