அசாமை புரட்டிப்போட்ட கனமழை வெள்ளப்பெருக்கு : நிலைமை மேலும் மோசமடையும் என எச்சரிக்கை !!

அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

அசாமை புரட்டிப்போட்ட கனமழை வெள்ளப்பெருக்கு : நிலைமை மேலும் மோசமடையும் என எச்சரிக்கை !!

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அசாமில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

டிமா ஹசாவோ பகுதியில் ரயில் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோபிலி, போரபணி ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பல்வேறு பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.  

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்நிலைமை மேலும் மோசமடையும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.