திடீர் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை...சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

திடீர் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை...சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!
Published on
Updated on
1 min read

இமாச்சல பிரதேசத்தை அடுத்த ராம்பூரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 

இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பாகி பாலத்தில் மழை நீர் வெள்ளம்போல் அடித்துச் செல்கிறது. இதனால் சாலை மொத்தமும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாலையில் மாணவர்கள் வந்த வேன் உட்பட சில வாகனங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சாலை சரியாகும் வரை சிக்கியுள்ள வாகனங்களில் உள்ளவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், மொஹால் மாவட்டத்தின் குலு பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலையில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை மீட்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். 

மேலும், தொடர் மழையால் காங்க்ரா நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாண்டா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சம்பா, காங்க்ரா, குலு, சிம்லா, சிர்மௌர் மற்றும் மண்டி மாவட்டங்களின் சில நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com