"பெரும் பதற்றம்".. சொந்த நாட்டிற்கு வரமுடியாமல் தவிக்கும் இந்தியர்கள்!! - அமைச்சர்களை அனுப்பி மக்களை மீட்டு வர திட்டம்!

போர் மூண்ட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு, 4 அமைச்சர்களை அனுப்பி இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

"பெரும் பதற்றம்".. சொந்த நாட்டிற்கு வரமுடியாமல் தவிக்கும் இந்தியர்கள்!! - அமைச்சர்களை அனுப்பி மக்களை மீட்டு வர திட்டம்!

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 5வது நாளாக போர் தொடுத்துள்ளது. இதனால் எங்கும் குண்டு முழக்கமும், பதற்றமான சூழலும் நிலவுகிறது.  மக்கள் பலர் பதுங்கு குழிகளுக்குள் தத்தளித்து வருவதால், இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  

இதுதொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை  பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதனிடையே போர் மூண்ட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் குழுவை அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்று இறுதி முடிவெடுக்க  பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரன் ரிஜிஜூ, ஓய்வுபெற்ற ஜெனரல் வி. கே சிங் ஆகியோரை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அமைச்சர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.