மோடி ஆட்சியில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் கருத்து சுதந்திரம் பறிப்பு?

மோடி ஆட்சியில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் கருத்து சுதந்திரம் பறிப்பு?

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த  முதல் எட்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை முந்தைய எட்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 
2006 முதல் பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் குறைந்தபட்சம் 51 எம்.பி.க்கள் இரு அவைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 139 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மழைக்கால கூட்டத்தொடர் 2022:


கடந்த திங்கள்கிழமை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 4 பேர் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  அதனைத் தொடர்ந்து 20 எம்.பி.க்கள்   கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில்  மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மோடி அரசாங்கத்தில் 170%ஆக  அதிகரித்த இடைநீக்கம்:
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற 2006லிருந்து 2014 ஆம் ஆண்டு தொடக்கம் வரையில் நாடாளுமன்றத்தின் 5 கூட்டத்தொடர்களில் 51 எம்.பிக்கள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டன. ஆனால், தற்போது அத்தகைய இடைநீக்கங்களின் எண்ணிக்கை இரு அவைகளிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இடைநீக்க விதிகள்:

நாடாளுமன்றத்தின் அலுவல் நடத்தை விதிகளின்படி , அவையிலோ அல்லது அவைக்கு வெளியிலோ அவை உறுப்பினர்களின்   தவறான நடத்தைக்காக தண்டிக்க உரிமை உண்டு.

உறுப்பினர்களின்  தவறான நடத்தை அல்லது அவமதிப்பு காரணமாக  அறிவுறுத்துதல், கண்டித்தல், அவையிலிருந்து வெளியேற்றுதல்,  இடைநீக்கம் செய்தல் தண்டனைகளை விதிக்கலாம்.

மாநிலங்களவை:

மாநிலங்களவையில் விதி 256 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதை குறித்து கூறுகிறது.  இடைநீக்க தீர்மானம்  உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால்  அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். எவ்வாறாயினும், இடைநீக்கத்தை மற்றொரு தீர்மானம் மூலம் நிறுத்த முடியும்.

மாநிலங்களவையின் விதி 255 இன் கீழ் தலைவரின் கருத்துப்படி, மிகவும் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் எந்தவொரு உறுப்பினரையும், மீதமுள்ள கூட்டத்திற்கு வருவதற்கு விலக்கு அளிக்கலாம்.

மாநிலங்களவையில் உள்ள பல எம்.பி.க்கள் 255 விதியின் கீழ் ஒரு நாள் அவையில் இருந்து வராமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர், ஆனால் இது இடைநீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டதில்லை. 

மக்களவை:

மக்களவை இடைநீக்க விதி விதி 374 மற்றும் 374 (A) இன் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு உறுப்பினரை இடைநீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை சபாநாயகருக்கு வழங்குகிறது. இது ஒரு தீர்மானத்தை முன்வைப்பதன் மூலம் அல்லது சபாநாயகரின் சொந்த அதிகாரத்தில் இடைநீக்கம் செய்யப்படலாம்.

மோடி அரசாங்கத்தில் மாநிலங்களவையில் இடைநீக்கம்:

மாநிலங்களவையில், 2006-2014 காலகட்டத்தில், மார்ச் 2010 இல், அப்போதைய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் பிருத்விராஜ் சவான், மார்ச் 9 அன்று ஏழு எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைத்தார். 

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை அமைச்சர் ஒருவரிடம் இருந்து பறித்த எம்.பி.க்கள், மசோதாவின் நகல்களை சபைக்குள் வீசினர். டாக்டர் எஜாஸ் அலி ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் இடைநீக்கம் செய்ய மார்ச் 15 அன்று மற்றொரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

மோடி அரசாங்கத்தின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் (2014 முதல் 2019 வரை), மாநிலங்களவையில் ஆளுங்கட்சிக்கு குறைவான இடங்களே இருந்தபோது, மாநிலங்களவையில் எவ்விதமான இடைநீக்கமும் செய்யபடவில்லை. ஆளுங்கட்சியின் பலம் அதிகரிக்க தொடங்கியதிலிருந்து அதிக அளவில் இடைநீக்கங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

 செப்டம்பர் 2020 இல் , சர்ச்சைக்குரிய இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு எம்.பி. க்களும் இரண்டு மசோதாக்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்திற்குள் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஜூலை  2021 இல் , திரிணாமுல் காங்கிரஸ்ன் மாநிலங்களவை எம்பி சாந்தனு சென் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவின் ஆவணங்களைப் பறித்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். 

மீண்டும், ஆகஸ்ட் 2021 இல் பெகாசஸ்  ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக ஆறு திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் ஒரு நாள் முழுவதுமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

2021 நவம்பர் மாத குளிர்கால கூட்டதொடரின் போதும் இடைநீக்கங்கள் தொடர்ந்தது. 2021 டிசம்பரில், திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவையின் தலைவர் டெரெக் ஓ பிரையன் முழு கூட்டதொடருக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

2021ல்  தவறான செயல்களுக்காக 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில்  இருந்து முழு அமர்விற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான இடைநீக்கம் என்று அப்போது ஆச்சாரி கூறியிருந்தார்.

ஆனால் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது புதிய சாதனை ஆகும். 

மோடி அரசாங்கத்தில் மக்களவையில் இடைநீக்கம்:

மக்களவையில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் பெரிய அளவிலான எம்.பி.க்கள் இடைநீக்கம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மார்ச் 1989 இல் நடந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட, தாக்கர் கமிஷன் அறிக்கை தொடர்பாக சபையை சீர்குலைத்ததற்காக சுமார் 63 எம்.பி.க்கள் மூன்று நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்ட ஒரு நாள் கழித்து இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

மக்களவை செயலகத்தால் பராமரிக்கப்படும் பதிவுகளின்படி, 2006 மற்றும் 2014 க்கு இடையில் இடைநீக்கம் நான்கு முறை நிகழ்ந்துள்ளன.  ஏப்ரல் 2012, ஆகஸ்ட் 2013, செப்டம்பர் 2013 மற்றும் பிப்ரவரி 2014 .   மொத்தம் 44 எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து ஒழுக்கக்கேடான நடத்தைக்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

2014 ஆம் ஆண்டுக்கு மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 91 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 2015 இல் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அப்போது  25 எம்.பி.க்கள்  அப்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜனால் ஐந்து நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஜூலை 2017 இல், மக்களவை எம்.பி.க்கள் 6 பேர் ஐந்து நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

மீண்டும், 2019 இல், மக்களவை அதிக எண்ணிக்கையிலான இடைநீக்கங்களைக் கண்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார்  45 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர், ஒரு நாள் கழித்து, மேலும் 21 எம்.பி.க்கள் நான்கு நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மே 2014 முதல், மோடி அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து, மக்களவை எம்.பி.க்கள் ஒவ்வொரு ஆண்டும் சபை அமர்வின் போது இடைநீக்கம் செய்யப்படுவது தொடர்கிறது என்று தரவு காட்டுகிறது.