இன்று முதல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி

பிரதமர் மோடி அறிவித்தபடி இன்று முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இன்று முதல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி

பிரதமர் மோடி அறிவித்தபடி இன்று முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்தபோது, அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முறையை மத்திய அரசு கையாண்டது. ஆனால் இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு குறிப்பிட்ட விலைக்கு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வாங்கி மாநிலங்களுக்கு வழங்கியது. அதுமட்டுமல்லாது கூடுதல் தடுப்பூசி தேவைப்பட்டால் மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அதற்கான விலைக்கொடுத்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தது. 

இதனிடையே தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவியதால் மாநிலங்கள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது தடுப்பூசி மீதான வரியையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என மாநிலங்கள் வலியுறுத்தி வந்தன.

இந்த சூழலில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம், பட்ஜெட்டில் தடுப்பூசிக்கு என ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாயை முறையாக பயன்படுத்தி, மாநிலங்களுக்கு மத்திய அரசே இலவசமாக தடுப்பூசி வாங்கிக்கொடுக்கலாமே என கூறியிருந்தது. 

இதையடுத்து, நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருகிற ஜூலை 21ம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி கடந்த 7ம் தேதி அறிவித்தார். இதற்கென தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீதம் தடுப்பூசிகள் பெறப்பட்டு, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது தனியார் நிறுவனங்கள் வழக்கம் போல் 25 சதவீதம் தடுப்பூசிகள் பெற்று, தடுப்பூசி செலுத்த தனியார் மருத்துவமனைகளை நாடுவோருக்கு செலுத்தலாம் என தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து மத்திய அரசு தடுப்பூசிக்கான புதிய வழிக்காட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது. அதில் தனியார் மருத்துவமனைகள் அதிகபட்சமாக ஆயிரத்து 410 ரூபாய்க்கு மட்டுமே தடுப்பூசிகளை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும்,  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் தொகை, தொற்று பாதிப்பு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையிலே மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்படது. 

இந்தநிலையில், பிரதமர் மோடி அறிவித்தபடி இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்காக ஏற்கனவே பலர் கோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.