முன்னாள் முதலமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை !!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. 

முன்னாள் முதலமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை !!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளியான ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு டெல்லி ரோஸ் அவெனியூ நீதிமன்றம் இன்று தண்டனை விவரம் அறிவித்தது. முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதலா, இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான இவர்  கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004 வரை ஹரியானா மாநில முதல்வராக பதவி வகித்தார். 

அப்போது, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ 6.10 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.

அதில், ஓம் பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். தீர்ப்பு விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு விவரங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் அறிவித்தனர். அதே நேரத்தில்  வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதலாவுக்கு சொந்தமான 4 சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வயது முதிர்வை மேற்கோள் காட்டி ஓம் பிரகாஷ் சவுதாலா தரப்பில் மேல்முறையீடு செல்லலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.