கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு போலி கொரோனா சான்றிதழ்?

கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு போலி கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு போலி கொரோனா சான்றிதழ்?

கொரோனா 2வது அலை பரவத்தொடங்கிய ஏப்ரல் மாதத்தில், ஹரித்வாரில் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்க விரும்புவோருக்கு பரிசோதனை நடத்த 22 தனியார் ஆய்வகங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியிருந்தது. இதில் கொரோனா இல்லை என்று கூறப்பட்ட பலருக்கு, நிகழ்ச்சிக்கு பின் தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த தலைமை மேம்பாட்டு அதிகாரி சவுரப் ஹகர்வார் தலைமையில் தனிக்குழுவை உத்தரகாண்ட் அரசு நியமித்தது. அவர்கள் நடத்திய விசாரணையில், சுமார் ஒரு லட்சம் பேருக்கு போலி கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஒரே செல்போன் எண்ணிலிருந்து 50 பேர் விண்ணப்பித்திருந்ததும், ஒரே டெஸ்ட் கிட்டை பயன்படுத்தி 700 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதும் தெரிந்தது. அதுமட்டுமல்லாது மக்களிடம் இருந்து கொரோனா மாதிரிகளை பெற்றவர்களும் ஹரித்வாரை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.