மின்னணு மருத்துவ திட்டம்... பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...

நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரவர் மருத்துவ தகவல்கள் அடங்கிய பிரத்யேக அடையாள அட்டை வழங்கும், 'மின்னனு மருத்துவ திட்டத்தை', பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மின்னணு மருத்துவ திட்டம்... பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...

பிரதமர் மோடி, கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில், நாடு முழுவதும் ’மின்னணு மருத்துவ திட்டம்’ அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது சோதனை முயற்சியாக 6 யூனியன் பிரதேசங்களில், மின்னணு மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த 7 ஆண்டுகளாக நாட்டின் சுகாதார வசதிகளை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில், இன்று ஒரு புதிய கட்டத்தில் இந்தியா நுழைவதாக தெரிவித்தார். மேலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதில், இந்த திட்டம் பெரும் பங்கு வகிக்கும் எனக் கூறிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுடன் நோயாளிகளை இணைக்கும் தொழில்நுட்பம் மூலம் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் எனக் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தனிநபரின் மருத்துவ தகவல்கள் குறித்த தகவல் சேகரிக்கப்படுவதோடு, அதன் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும், மருத்துவ சேவைக்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல்களை எளிதில் பெற முடியும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படுவதோடு, அது அவர்களின் சுகாதார கணக்காகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட சுகாதார பதிவுகளை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளவும், மருத்துவ சேவைகளை எளிதாகப் பெறவும் வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.