வேலை கேட்ட இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாபம் : செல்போன் திருடியதாக லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற டிரைவர்கள்!!

ஒடிசாவில் செல்போன் திருடியதாக இளைஞரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற கொடூர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலை கேட்ட இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாபம் : செல்போன் திருடியதாக லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற டிரைவர்கள்!!

ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்  பகுதி நேர டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22ஆம் தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களிடம் வேலை கேட்டுள்ளார். பாரதீப் துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களிடம் வேலை கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஒரு டிரைவர் தனது செல்போனை காணவில்லை என சத்தம்போட்டார். உடனே சில டிரைவர்கள் சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து, அவர்தான் செல்போனை திருடியதாக கூறி சரமாரியாக அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்தனர். பின்னர் ஒரு லாரியின் முன்புறம் கயிற்றால் அவரை கட்டி லாரியை ஓட்டிச்சென்றனர். 3 கி. மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்ற அவர்கள் பின்னர் அவிழ்த்து விட்டனர்.

லாரி டிரைவர்கள் செய்த இந்த கொடூர செயலை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த பயங்கர சம்பவத்தை நிகழ்த்திய லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ பதிவை பார்த்த போலீசாரும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள், தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.