இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை தனியொரு மனிதராக உருவாக்கியவர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே - அல்லாடி கிருஷ்ணசாமி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர்

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை

சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவ.26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தை, டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும்,  இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், கடந்த 2015, நவம்பர் 26 ஆம் தேதி முதன்முதலாக மோடி அரசால் அரசியலமைப்பு நாள் அனுசரிக்கப்பட்டது.


இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டிருப்பது என்ன?

"நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி; உறுதிசெய்திட; மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் சகோதரத்துவ உணர்வை ஊக்குவித்திட இந்த 1949, நவம்பர் 26ஆம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருவதாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ளது.


அரசியல் அமைப்பு சட்டத்தை தனியொருவராக உருவாக்கிய அம்பேத்கர் 

அரசியல் அமைப்பு சட்ட வரைவினை உருவாக்குவதில் அம்பேத்கரின் முழுமையான பங்களிப்பு குறித்து, அக்குழுவில் ஒருவராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அவர்கள், நாடாளுமன்றத்தில் ஒரு செய்தியினை பதிவு செய்கிறார். அச்செய்தி பின்வருமாறு:

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை தனியொரு மனிதராக உருவாக்கியவர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. இதனை அண்ணலின் பேரில் எனக்கு இருக்கும் அளவற்ற அன்பால் நான் கூறவில்லை.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினை உருவாக்க டாக்டர் அம்பேத்கர் தலைமையில் என்னையும் உள்ளிட்ட ஏழு பேர் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர். உண்மையில் அச்சமயத்தில் நடந்தது என்னவென்றால், குழு நியமிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே எழுவரில் ஒருவர் இறந்து விட்டார்.

இரண்டு பேருக்கு குடியுரிமைக் கிடைத்துவிட்டக் காரணத்தால் அமெரிக்காவுக்கு பறந்து விட்டனர். மேலும் இரண்டு பேர் இக்குழுவில் பணியாற்றாமல், சர்தார் பட்டேலுக்கு உதவியாக மாநில இணைப்புக் குழுவில் பணியாற்ற சென்றுவிட்டனர். மீதம் இருந்தவர்கள் அம்பேத்கர் அவர்களும், நானும்தான். 

என் மனசாட்சியின்படி சொல்கிறேன், அரசியல் அமைப்பு சம்பந்தமாக கூட்டப்பட்ட எந்த ஒரு கூட்டத்திலும் நான் பங்கேற்கவுமில்லை, அதற்காக பணியாற்றவுமில்லை. உண்மையை சொன்னால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை தனியொரு மனிதராக உருவாக்கியவர் அம்பேத்கர் மட்டும் தான் என்பதை நான் பதிவு செய்யவிரும்புகிறேன்.

அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு 1947, ஆகஸ்ட் 29 -ல் இந்திய அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.

அம்பேத்கர், கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவ ராவ், டி. பி. கைதான் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இக்குழுவில் இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21ல் ஒப்படைத்தது. 

மேலும் படிக்க: அம்பேத்கர் - காந்தி - புனா ஒப்பந்தம் ஒருப் பார்வை


அரசியல் சட்டம் குறித்து அம்பேத்கர்

ஒரு அரசமைப்பு சட்டம் என்னதான் மேன்மையாக இருந்தாலும், அதனை செயல்படுத்த வருபவர்கள் மோசமானவர்களாக இருப்பார்களேயானால் அந்த சட்டமும் மோசமானதாக மாறிவிடும். அதே வேளையில் செயல்படுத்துபவர்கள் மட்டும் நல்லவர்களாக இருப்பார்களேயானால் மோசமான அரசமைப்பு சட்டம் கூட மேன்மையான ஒன்றாக ஆகிவிடும். 

ஓர் அரசமைப்பு சட்டம் எப்படி இயங்குகிறது என்பது அந்த சட்டத்தை மட்டும் சார்ந்தது அல்ல, அரசமைப்புச் சட்டத்தின் வேலை என்பது அரசின் செயல்பாட்டிற்கு அவசியமான உறுப்புகளான சட்டம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றை வழங்குவது மட்டுமே. அப்படி வழங்கப்பட்ட அந்த உறுப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பது அந்த அரசியல் சார்ந்த மக்களும் தங்களுடைய அரசியல் மற்றும் சமூக நலன்களைப் பேணுவதற்காக அந்த மக்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட அரசியல் கட்சிகளையுமே சார்ந்தது.

நவம்பர் 25 1949 ல் அரசமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

- அறிவுமதி அன்பரசன்