2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதில் அவசரம் வேண்டாம்... ஆர்பிஐ!!

2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதில் அவசரம் வேண்டாம்... ஆர்பிஐ!!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்கள் அவசரப்பட வேண்டாம் என ஆர்.பி.ஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக ஆர்.பி.ஐ அறிவித்தது. தொடர்ந்து நாளை முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் என எந்த வங்கியிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்ததாஸ், பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்ட நோட்டுகளை சமன்செய்யவே, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார். 

ஆனால் 6 லட்சத்து 73 ஆயிரம் கோடி என புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 3 லட்சத்து 62 ஆயிரம் கோடியாகக் குறைந்ததாக சுட்டிக்காட்டிய அவர், 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதால், அவை திரும்பப் பெறப்படுவதாகவும் தெளிவுபடுத்தினார்.

மேலும் செப்டம்பர் வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் கூறினார்.  அதனால் மக்கள் அவசரமின்றி நிதானத்துடன் வங்கிகளில் நோட்டுகளை மாற்றுமாறும், இதற்கு வங்கிகள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நாள்தோறும் எத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகின்றன என்ற தகவல்களை முறையாக சேகரிக்கக் கூறி வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  மக்கள் காத்திருப்பதற்கு ஏதுவாக நிழற்குடைகள், தண்ணீர் வசதிகளை செய்து வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  ரூ.10 கோடி மதிப்பிலான பணிகள்... பார்வையிட்ட அமைச்சர்கள்!!