அதானி குழும விவகாரம்: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதானி குழும விவகாரம்: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதானி நிறுவன முறைகேடு, பண வீக்கம், வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து சென்னை உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

அதானி குழுமம் பெரிய அளவில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்ட்பர்க் நிறுவனம் அண்மையில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த அறிக்கை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் அமைத்தது. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காப்பதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக, சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அதானி நிறுவனத்தின் பங்குச் சந்தை ஊழலுக்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதேபோல், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை களைத்ததால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க : பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்...மாணவ மாணவிகளிடம் தேர்வு குறித்து கேட்டறிந்த அமைச்சர்!

இதேபோல், சண்டிகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதான நிறுவனத்தின் நிதி முறைகேட்டை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். உத்தரகாண்ட் மாநிலத்தில் மத்திய அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அதானி நிறுவனம், பணவீக்கம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். அதேபோன்று, ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பண வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.