புதுச்சேரியில் தொடரும் காங்கிரஸ் மோதல்....!!!

புதுச்சேரியில் தொடரும் காங்கிரஸ் மோதல்....!!!

புதுச்சேரி காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளவுபட்ட காங்கிரஸ்:

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.  முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்ரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் ஒரு பிரிவாகவும், இதேபோல்  முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான்,  அரசு முன்னாள் கொறடா அனந்தராமன் ஆகியோர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

தலைவரை மாற்ற கோரிக்கை:

இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் தலைமையில் வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்ரமணியன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது  கூட்டத்தில் ஒரு தரப்பினர் மாநில தலைவரின் பதவி காலம் முடித்து விட்டதால் அவரை மாற்றம் செய்யக்கோரி அமளியில் ஈடுபட்டனர். 

முற்றுகை போராட்டம்:

தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூச்சலில் ஈடுபட்டதால் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூட்டத்தின் பாதிலிருந்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து மாநில தலைவரை மாற்ற வலியுறுத்தி நாராயணசாமிக்கு எதிரான தரப்பினர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கூட்டம் முடிந்து கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மேலிட பொறுப்பாளர் குண்டுராவை கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து மாநில தலைவர் வாகனத்தில் ஏறி புறப்பட முயன்ற மேலிட பொறுப்பாளரை முன்னாள் அமைச்சர்கள் தரப்பை சேர்ந்த தொண்டர்கள் வழி விடாமல் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர் இதனால் காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com