மக்களின் ஆதரவால் கண்கலங்கி நிற்கிறேன் - ராகுல்காந்தி பேச்சு!

மக்களின் ஆதரவால் கண்கலங்கி நிற்கிறேன் - ராகுல்காந்தி பேச்சு!
Published on
Updated on
1 min read

ஒற்றுமைப் பயணத்திற்கு மக்கள் அளித்த அபரிமிதமான அன்பால் கண்கலங்கி நிற்பதாக நிறைவுக் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா என்ற பெயரில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் பாதயாத்திரையை நடத்தியது. 145 நாட்களில் மொத்தம் 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்தப் பேரணியின் நிறைவு விழாவாக ஸ்ரீநகரில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் தேசியக்கொடியை ஏற்றிய ராகுல்காந்தி, தங்கை பிரியங்காவுடன் பனிக் கட்டிகளை வீசி உற்சாகமாக விளையாடினார்.

இதைத்தொடர்ந்து கொட்டும் பனிக்கு மத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அப்போது பேசிய திருச்சி சிவா, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இப்பேரணி வலியுறுத்தியதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்த யாத்திரை தேர்தலுக்கானதல்ல - வெறுப்புணர்வுக்கு எதிரானது எனக் கூறினார். 

இறுதியாகப் பேசிய ராகுல்காந்தி, ஆரம்பத்தில் இவ்வளவு தூரம் நடக்க முடியுமா என தயங்கியதாகவும், மக்களின் ஆதரவாலேயே அது சாத்தியமானதாகவும் தெரிவித்தார். இம்மாநிலத்தில் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டதன் மூலம் பாஜகவின் எந்த தலைவராலும் செய்ய முடியாததை காங்கிரஸ் கட்சி நடத்திக் காட்டியிருப்பதாகவும் கூறினார். மக்களின் அபரிமிதமான ஆதரவால் கண்கலங்கி நிற்பதாகவும், இத்தனை அன்புக்கு மத்தியில் இந்தக்குளிர் பெரிதாகத் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com