இடைத்தேர்தலில் போர்டோவாலி தொகுதியில் முதல்வர் மாணிக் சாஹா வெற்றி!

திரிபுராவின் போர்டோவாலி சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முதல்வர் மாணிக் சாஹா,6 ஆயிரத்து 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  

இடைத்தேர்தலில் போர்டோவாலி தொகுதியில் முதல்வர் மாணிக் சாஹா வெற்றி!

உத்தரப்பிரதேசத்தில் அசாம்கர் தொகுதி எம்பி அகிலேஷ் யாதவ் மற்றும் ராம்பூர் எம்பியான சமாஜ்வாதியின் மூத்த தலைவர் அசாம்கானும்  சட்டமன்றத்திற்கு தேர்வானதால் எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதேபோல் பஞ்சாப் முதல்வரானதால் சங்ரூர் தொகுதியில் பகவந்த் மான் ராஜினாமா செய்தார். இதனால் இந்த 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் பல்வேறு காரணங்களால் காலியாக இருந்த டெல்லி ராஜிந்தர்நகர்,  ஜார்கண்டின் மந்தர், ஆந்திராவின் அத்மாகூர் மற்றும் திரிபுராவின் அகர்தலா, போர்டோவாலி, சுர், ஜூபராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்தநிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா வெற்றி பெற்றார். எஞ்சிய 3 தொகுதிகளில் அகர்தலாவில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மக்களவைத் தொகுதிகளைப் பொறுத்தவரை  அசாம்கர் மற்றும் ராம்பூரில்  குறைவான வாக்கு வித்தியாசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. சங்ரூர் தொகுதியில் சிரோமணி அகாலிதளம் முன்னிலையில் உள்ளது. டெல்லி ராஜிந்தர் நகரில் ஆம் ஆத்மியும், ஆந்திராவின் அத்மாகூரில் ஒய்எஸ்ஆர் காங்கிரசும் ஜார்கண்டின் மந்தரில் காங்கிரசும் முன்னிலையில் உள்ளன.