பிப்ரவரியில் 3வது கொரோனா அலைக்கு வாய்ப்பு...  தினமும் 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை...

ஒமிக்ரான் அச்சுறுத்தலால், அடுத்தாண்டு பிப்ரவரியில் இந்தியாவில் 3வது அலை ஏற்படலாம் என்று ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பிப்ரவரியில் 3வது கொரோனா அலைக்கு வாய்ப்பு...  தினமும் 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை...

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா 3 ஆம் அலை கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சத்தை அடைய கூடும் என நிபுணர்கள் கணித்த நிலையில், பாதிப்புகள் பெரிதாக ஏற்படவில்லை. ஆனால், எதிர்பாராத வகையில், தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.

இதன் எதிரொலியாக இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் கொரோனா 3 ஆம் அலை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளதாக ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து கொரோனா தொற்றின் போக்கை கணித ரீதியில் கணித்துச் சொல்லும் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள ஐஐடி பேராசிரியர் மனீந்திர அகர்வால், இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது அலை ஏற்படலாம் என்றும், ஆனால் அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அன்றாடம் ஒரு லட்சம் முதல் 1. 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்றும், இதுவரை உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது ஒமிக்ரான், டெல்டா திரிபை போல் பாதிப்பை ஏற்படவில்லை என்றார். தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் பரவும் வேகம் கணக்கில் கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இதுவரை மருத்துவமனையில் சேர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும் கூறினார். இந்தியாவில் இதுவரை 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.