அதானி விவாதத்தை நிராகரிக்கும் மத்தியஅரசு...குற்றம் சாட்டும் மல்லிகார்ஜூன கார்கே!

அதானி விவாதத்தை நிராகரிக்கும் மத்தியஅரசு...குற்றம் சாட்டும் மல்லிகார்ஜூன கார்கே!

அதானி குழும விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. 

அவைகள் ஒத்திவைப்பு :

ஹிண்டர்ன்பெர்க் ஆய்வறிக்கை தொடர்பாக விவாதிக்க அனுமதிக்குமாறு நாடாளுமன்றம் கூடியதில் இருந்து எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், இன்று எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கவோ அல்லது உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணைக்குழு அமைக்கவோ அந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிக்க : துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்...அதிகரிக்கக்கூடும் உயிரிழப்புகள்!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, அதானி குறித்து பேசாமல் எப்படியாவது தப்பித்து விடவே மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று மக்களவை கூடியவுடன், அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கோஷங்களை எழுப்பிய நிலையில், அவை கூடிய 5 நிமிடங்களிலேயே மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவையிலும் அமளி தொடர்ந்த நிலையில், அமைதியாக பிரச்னையை வலியுறுத்துமாறு எதிர்கட்சிகளை அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து, அமளி அதிகரிக்கவே, மாநிலங்களவையும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.