புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா... மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது...

மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வகைசெய்யும் மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. 

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா... மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது...

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கிய உடன், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் கூட்டமானது நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின் கூட்டம் மீண்டும் கூடிய நிலையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வகை செய்யும் மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். ஆனால் மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன் அதுகுறித்த விவாதத்துக்கு அனுமதிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. 

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதை அடுத்து மத்திய வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பான மசோதாவை நிறைவேற்றும் வகையில் குரல் வாக்கெடுப்பு கோரப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பெரும்பான்மை பாஜக உறுப்பினர்களின் குரல் வாக்கு பதிவின் மூலம் மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து கூட்டமானது மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மசோதா மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையிலும் இம்மசோதா வெற்றிகரமாக நிறைவேறும்பட்சத்தில் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கான அனுப்பி வைக்கப்படும்.