சுதந்திர பூங்காவில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம்!!!

அரசு சார்பில் இந்தி தினம் கொண்டாடப்படுவதை கண்டித்து பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
சுதந்திர பூங்காவில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம்!!!
Published on
Updated on
1 min read

கர்நாடக பாஜக அரசு சார்பில் இன்று இந்தி தினம் மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை கண்டித்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் பல்வேறு கன்னட அமைப்புக்கள் ஒன்று கூடி இந்தி தினம் கொண்டாடப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மற்றும் மாநில பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன‌. தங்கள் மொழியை அழித்து பாஜக அரசு இந்தி மொழியை தங்கள் மீது திணிப்பதை ஏற்றுகொள்ள முடியாது என கன்னட அமைப்பினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் சி எம் இப்ராஹிம் தமிழ் இது குறித்து பேசுகையில், “தமிழகத்தில் அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகிய தலைவர்கள் இருந்தபோது இந்தியை திணிக்க முடியவில்லை. ஆனால், தற்பொழுது அப்பாஜி பிதாஜி என வந்து இந்தி மொழியை திணிக்கிறார்கள். அதை ஏற்க முடியாது! இதனால் இன்று காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தியுள்ளோம்” எனக் கூறினார்.

மேலும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரியங்கா கார்கே இது குறித்து பேசுகையில், “எங்கள் மொழியை கீழே தள்ளிவிட்டு வேறு மொழியை தூக்கிப்பிடிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு பணத்தில் இந்தி தினம் கொண்டாடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.” என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com