பாஜக VS எதிர்க்கட்சிகள் முற்றும் மோதல்: எதிர்வினை என்ன?

பாஜக VS எதிர்க்கட்சிகள் முற்றும் மோதல்: எதிர்வினை என்ன?

இரு அவைகளிலும் எம்பிக்கள் இடைநீக்கம் குறித்து அரசியல் தலவர்கள் அவர்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர்:

கடந்த எட்டு ஆண்டுகளாக எம்.பி.க்கள் இடைநீக்கம் என்பது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்த இடைநீக்கங்கள் ஆள்ங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும்  இடையே பெரும் விரோதம் இருப்பதை காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் நலனை மறந்து இருவரும் ஒருவரையொருவர் அரசியல் எதிரிகளாக கருதுகின்றனர் என்று மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி கூறியுள்ளார்.

இது போன்ற செயல்பாடுகள் நாடாளுமன்றத்தின் அமைதியான நடவடிக்கைகளை தடுக்கிறது எனவும் அங்கு எந்த விவாதமும் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன எனவும் இது வளர்ந்து வரும்  ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் ஆச்சாரி கூறியுள்ளார்.

இது ஒரு தீவிர நெருக்கடியின் அடையாளம். நாடாளுமன்றம் இவ்வாறு செயல்பட முடியாது. இதற்கு முந்தைய ஆட்சிகளில் இரு தரப்பு உறுப்பினர்களிடையேயும் மிகவும் ஆரோக்கியமான தொடர்பு இருந்தது. அது முதிர்ந்த ஜனநாயகத்தின் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது  அந்த பாரம்பரியம் இப்போது உடைந்து கொண்டு வருகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டு கூறினார்.

முன்னாள் நிதி அமைச்சர்:

நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்தையும்  அனுமதிக்காமல், நரேந்திர மோடி அரசு ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கிறது' என்று 
மாநிலங்களவையின் எம்.பி.யும், முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம் கூறியுள்ளார்.

விவாதத்தை அனுமதிக்கவில்லை என்றால், போராட்டத்தை அனுமதிக்கவில்லை என்றால், ஜனநாயகம் எதற்கு? தேர்தல் எதற்கு? பாராளுமன்றம் எதற்கு? அரசாங்கம் ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கிறது. ஜனநாயகம் மெதுவாக இறந்து கொண்டிருக்கிறது. அனைத்து குடிமக்களும் ஆபத்து குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

செவ்வாயன்று மாநிலங்களவையில் இருந்து 19 எதிர்க்கட்சி எம்.பி. க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு காரணம் அவர்களின் தவறான நடத்தை என்று மாநிலங்களவை துணைத் தலைவர் கூறினார். எம்.பிக்களின் 'தவறான நடத்தைக்கு' காரணம் என்ன என்று அவர் கேட்டிருக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் கேள்வியெழுப்பினார். 

விலைவாசி உயர்வு, புலனாய்வு அமைப்புகளின் தவறான பயன்பாடு மற்றும் குஜராத்தில் நடந்த ஹூச் சோகம் பற்றிய கேள்விகளை எழுப்பியதை ஏற்க மறுத்ததால், நாடாளுமன்ற விதிகள் மற்றும் மரபுகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாக கூறி எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டனர் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றத்தை "ஆழமான, இருண்ட அறையாக" மாற்றுகிறது, அங்கு உள்ளே என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது என்று ஓ பிரையன் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காக முழு அமர்வுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது ஜனநாயகத்தை பற்றிய கேள்வியெழுப்பியுள்ளது.  துடிப்பான ஜனநாயகத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், விலைவாசி உயர்வு, பொருளாதார முடக்கம் போன்ற முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதத்தில் பங்கேற்பது யார்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இடைநிறுத்தப்பட்டால் யாருக்கு லாபம் என்று யோசியுங்கள் என்று ஓ பிரையன் கேட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய ஊடகப் பொறுப்பாளர்:

ஆனால், இந்த கருத்துகளை ஆளும் பாஜக ஏற்கவில்லை.  அனைத்து விஷயங்களிலும் விவாதம் நடத்த அரசாங்கம் தயாராக இருந்தும் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அவையை செயல்பட அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் மாநிலங்களவை எம்.பி.யும், பாஜகவின் தேசிய ஊடகப் பொறுப்பாளருமான அனில் பலுனி.

எதிர்கட்சியினர் அவையை தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்ப முயற்சிக்கும் உறுப்பினர்கள் கூட சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் தொடர்ந்து இடையூறு செய்யப்படுகிறார்கள். இது  ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் சபைக்குள் அனுமதிக்கப்படாத பதாகைகளை ஏந்திச் வருகின்றனர். நாங்கள் பேச பல முறை முயற்சித்தோம் ஆனால் பலனில்லை. நாடாளுமன்றம் என்பது மக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்தும் இடமாகும். ஆனால் அதை அவர்களின் பிரச்சனைகள்  குறித்து விவாதம் நடத்தும் இடமாக மாற்றி வருகின்றனர் என்று கூறியுள்ளார் அனில் பலுனி.