அசாம் வெள்ள பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு!!

அசாம் வெள்ள பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ள நிலையில்  கிட்டதட்ட 45 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் வெள்ள பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு!!

அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மழை-வெள்ளம் ஒருபுறம் இருக்க பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதேபோல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினருடன் போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, அசாம் மாநிலத்தில் கடந்த 24 மணி வெள்ளத்தில் 2 குழந்தைகள் உட்பட மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் 17 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

மொத்தம் 4 ஆயிரத்து 536 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதாகவும், இதில் பர்பேட்டா என்னும் பகுதி கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அங்கு 10 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நாகோன் மாவட்டத்தில் 5.03 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் வேறு பகுதிகளுக்கு  இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 84 ஆயிரம் மக்கள் 759 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.