லடாக் பகுதியில் மேலும் 50 ஆயிரம் வீரர்கள்,. சீனாவை சமாளிக்க இந்தியா தீவிரம்.! 

லடாக் பகுதியில் மேலும் 50 ஆயிரம் வீரர்கள்,. சீனாவை சமாளிக்க இந்தியா தீவிரம்.! 

லடாக் பகுதியில் சீனா அதிகப்படியான ஆயுதங்களையும் வீரர்களையும் நிலைநிறுத்த தொடங்கியுள்ள நிலையில், அங்கு இந்தியா சார்பில் மேலும் 50 ஆயிரம் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று 3 நாள் பயணமாக லடாக் சென்றார். எல்லையோர கட்டமைப்பு பணிகளை தொடங்கி வைத்த அவர், லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் லடாக் உள்ளிட்ட பல்வேறு எல்லை பகுதிகளில் சீனா அதிகப்படியான ஆயுதங்களையும் வீரர்களையும் நிலைநிறுத்த தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக எல்லையில் இந்தியா சார்பிலும் கூடுதலாக 50 ஆயிரம் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சுமார் 2 லட்சம் துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் அதிநவீன போர் விமானங்களை எல்லையில் கொண்டு சென்று நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில் இமயமலையில் போரிடும் அளவுக்கு சீன வீரர்களுக்கு பயிற்சி போதாது என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் விமர்சித்திருந்த நிலையில், அதிகப்படியான ஆயுதங்களையும் வீரர்களையும் லடாக் பகுதியில் நிலைநிறுத்த சீனா தொடங்கியுள்ளது. மேலும் சீன எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாம் திபெத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து கிட்டதட்ட 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாம், கரடு முரடான மலைப்பகுதியில் போரிடுவதற்கு ஏதுவாக சீன வீரர்கள் பயிற்சி எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.