மறைந்த பிபின் ராவத் இடத்தில் அனில் சவுகான்.. சர்ச்சையும், பதவியேற்பும்..!

முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பதவியேற்பு..!

மறைந்த பிபின் ராவத் இடத்தில் அனில் சவுகான்.. சர்ச்சையும், பதவியேற்பும்..!

பிபின் ராவத் இறப்பு:

காலாட்படை, கப்பல் படை மற்றும் விமானப் படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத், கடந்தாண்டு குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன் பிறகு அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகானை மத்திய அரசு  முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக  நியமித்தது. 

அனில் சவுகான் பதவி ஏற்பு:

அதன்படி முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் இன்று பதவி ஏற்கிறார். இதற்கென டெல்லியில் உள்ள போர் நினைவிடம் சென்ற அவர், போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராணுவ தளபதி மனோஜ் பாண்டே , விமானப்படை தளபதி வி.ஆர் சவுத்ரி, கப்பற்படை துணை தளபதி அட்மிரல் கோர்மடே ஆகியோருடன் சேரிந்து கவுரவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கிளர்ச்சிகளை அடக்கிய சிறந்த வீரர்:

முப்படைகளின் தலைமை தளபதியான அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவலுடன் பணியாற்றியவர் மட்டுமல்லாது, மறைந்த பிபின் ராவத்துடன் ஒரே படைப்பிரிவில் பணியாற்றிய உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.  காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை அடக்கியதில் அனில் திறம்பட செயலாற்றியதாக கூறப்படுகிறது. 

62 வயதை பூர்த்தி அடையாதவர்:

இவருக்காகவே மத்திய அரசு ராணுவ விதிகளில் திருத்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.  ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரல் அல்லது ஜெனரல் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் 62 வயதை பூர்த்தி அடையாதவராக இருந்தால் இப்பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என விதிகளில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.