பியூட்டி பார்லர் முன் செல்போன் பேசியதால் ஆத்திரம் :  மகளின் கண்முன்னே பெண்ணை தாக்கிய பார்லர் உரிமையாளர் !!

கேரள மாநிலத்தில் பியூட்டி பார்லர் முன்பு நின்று செல்போன் பேசியதற்காக பட்டதாரி பெண்ணை தனது குழந்தையின்  கண் முன்பே நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்து உதைக்கும் பார்லர்  பெண் உரிமையாளரின் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பியூட்டி பார்லர் முன் செல்போன் பேசியதால் ஆத்திரம் :  மகளின் கண்முன்னே பெண்ணை தாக்கிய பார்லர் உரிமையாளர் !!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சாஸ்தமங்கலம் பகுதியை சேர்ந்த மீனா என்பவர் அதே பகுதியில் பெண்களுக்கான பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். மருதங்குழி பகுதியை சார்ந்த சேபா என்ற பட்டதாரி பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நகையை அடகு வைப்பதற்காக சாஸ்தமங்கலம் பகுதிக்கு வியாழக்கிழமையன்று வந்துள்ளார்.

இதனிடையே அந்தப் பெண் மீனா என்பவருக்கு சொந்தமான பியூட்டி பார்லர் முன்பு நின்று செல்போனில் பேசிக் கொண்டே இருந்துள்ளார். இதைப் பார்த்த மீனா அந்தப் பெண்ணுடன் முதலில் வாய் தகராறில் ஈடுபட்டு, நடுரோட்டில் தள்ளி விட்டுள்ளார் . பின்பு தனது செருப்பை கழற்றி நடுரோட்டில் வைத்து அவரது மகளின் முன்னிலையில் தாறுமாறாக செருப்பால் தாக்கியுள்ளார்.

இதை தட்டி கேட்க சென்ற சிலரையும் இவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் வீடியோ எடுத்தவர்களையும் திட்டியுள்ளார். தனது அம்மாவை செருப்பால் அடிப்பதை பார்த்த மகள் நடுரோட்டில் நின்று அழுதுள்ளார். தொடர்ந்து பட்டதாரி பெண்ணை செருப்பால் அடித்து உதைக்கும் மீனாவின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் மீனாவின் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.