கல்லூரிக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதாக குற்றச்சாட்டு...

கர்நாடக மாநிலம் மங்களூரில் கல்லூரிக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதாக கூறி கல்லூரி வளாகத்திற்குள் இந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரிக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதாக குற்றச்சாட்டு...

கடந்த பிப்ரவரி மாதத்தில் கர்நாடக அரசு பள்ளி மற்றும் பியூ கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து புதிய சீருடை சட்டத்தை அமல்படுத்தி கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இதை எதிர்த்து மாணவிகள் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் பலர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஹிஜாப் தடை தொடர்பான ஆணை செல்லும் என கடந்த மார்ச் 15 ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடையை கர்நாடக அரசு தீவிரமாக அமல்படுத்தியது. 

கர்நாடக அரசு கொண்டு வந்த சீருடை சட்டம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பு 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே செல்லும் என்ற நிலையில் பட்டப்படிப்பு மாணவிகள் வழக்கம் போல ஹிஜாப் அணிந்து கல்லூரியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் மங்களூருவில் உள்ள மங்களூரு பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டப்படிப்பு படித்து வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி வளாகத்திற்குள் இந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

உடுப்பி மாவட்டத்தில் தனியார் பியூ கல்லூரியில் கல்லூரி வளர்ச்சி குழு எவ்வாறு சட்டம் இயற்றி ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததோ அதேபோல் இந்தக் கல்லூரியின் வளர்ச்சி குழு சட்டத்தை இயற்றி ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.