தெலுங்கானா முதலமைச்சருடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு :  மக்களவை தேர்தலுக்கு ஆதரவு கோரினாரா?

டெல்லியில் தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் உடன் உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சந்திப்பு.

தெலுங்கானா முதலமைச்சருடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு :  மக்களவை தேர்தலுக்கு ஆதரவு கோரினாரா?

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுடன் உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் டெல்லியில் சந்திப்பு.  டெல்லியில் உள்ள தெலுங்கானா பவுனில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இரண்டு தலைவர்களும் 2024ம் ஆண்டில் பிராந்திய கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு கிளீனிக்குகளை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பார்வையிடுகிறார்.  அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளைய தினம் பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் மற்றும் டெல்லி முதலமைச்சரை அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஒருங்கிணைந்த பிராந்திய கட்சிகளின் கூட்டணிக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தருவது தொடர்பாக சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

முன்னதாக 2024 மக்களவைத் தேர்தல் பிராந்திய கட்சிகளின் கூட்டணிக்கு ஆதரவு தருமாறு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து இருந்தார். 

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது சந்திரசேகர் ராவ் பல்வேறு மாநில தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைந்த பிராந்திய கட்சிகளின் கூட்டணிக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.