அதானி விவகாரம் - மக்களவை 27ம் தேதி வரை ஒத்திவைப்பு!

அதானி விவகாரம் - மக்களவை 27ம் தேதி வரை ஒத்திவைப்பு!

அதானி மற்றும் ராகுல் விவகாரம் தொடர்பான அமளியால் மக்களவை 27ம் தேதி வரையும், மாநிலங்களவை 2.30 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு, கடந்த 13ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக லண்டனில் ராகுல்காந்தி பேசியதை எதிர்த்து பாஜக எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 8 நாட்களாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மோடி சமூகப்பெயர் சர்ச்சையில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்திற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர்  மாநிலங்களவை தொடங்கியதும் ராகுல்காந்தி விவகாரம் தொடர்பாக பாஜகவினரின் அமளியால் கூட்டம் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க : நடிகர் அஜித்தின் தந்தை மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அதேபோல், மக்களவை தொடங்கியதும் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்கக் கோரி எதிர்கட்சிகள் பதாகைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தேசிய பட்ஜெட்டை நிறைவேற்றும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது எதிர்கட்சிகளின் கடும் முழக்கங்களுக்கு நடுவே நிதி மசோதா நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அமளி தொடர்ந்ததால் மக்களவை 27ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.