பள்ளி மாணவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்களா..? தனியார் பள்ளி மீது கல்வீசி தாக்குதல்...

கல்வி கற்க வரும் மாணவர்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி, மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பள்ளி மாணவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்களா..? தனியார் பள்ளி மீது கல்வீசி தாக்குதல்...

மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷா பகுதியில் கிறிஸ்தவ மெஷினரிக்கு சொந்தமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்கள் கணிதத் தேர்வு எழுதி கொண்டிருந்த போது, திடீரென பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கும்பல், பள்ளி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பள்ளியில் இருந்த கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன. இதனால் தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் அச்சம் அடைந்தனர்.

தொடர் தாக்குதலால் பள்ளி வளாகத்தில் பதற்றம் நிலவியது. இதனால் அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள், சிறிது நேரத்தில் வெளியே ஓட்டம் பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பஜ்ரங் தல் என்ற இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 8 பேர் கிறிஸ்தவ மெஷினரியால் மதமாற்றம் செய்யப்பட்டதே காரணம் எனவும் கூறப்படுகிறது.

ஆனால், பள்ளியில் மத மாற்றம் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்த பள்ளி மேலாளர், மத மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் யாரும் தங்கள் பள்ளியில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.