சாலையோரத்தில் குழந்தை பிரசவித்த பெண்...! ஆம்புலன்ஸ் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு..!

சாலையோரத்தில் குழந்தை பிரசவித்த பெண்...! ஆம்புலன்ஸ் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு..!

ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள தஸ்மந்த்பூர் தொகுதியில் உள்ள துங்கல் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது கர்ப்பிணியான ஸ்வாதி முதுலிக்கு என்ற பெண்ணுக்கு புதன்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த பெண்ணின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் உள்ளூர் ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்) ஊழியரிடம் தெரிவித்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆம்புலனஸுக்கு தகவல் கொடுத்தனர்.  

ஆனால் ஆம்புலன்ஸ் தர்மகடா என்ற கிராமத்திற்கு அருகில் வந்துகொண்டிருந்த பொது சேற்றில் சிக்கியது. பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆஷா பணியாளரிடம், ஆம்புலன்ஸ் வாகனம் சேற்றில் சிக்கியதால் பயணிக்க இயலாது என்று கூறினர். மேலும் அவர்கள், நேரத்தை வீணடிக்காமல் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்ட இடத்திற்கு பெண்ணை அழைத்து வருமாறு கூறியுள்ளனர்.

ஸ்வாதியின் குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அறிவுறுத்தலைப் பின்பற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காத்திருக்கும் ஆம்புலன்ஸை அடைய கால்நடையாகப் பயணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், சாலையோரத்தில் நடுவழியில் விழுந்த ஸ்வாதி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

பின்னர் ஸ்வாதி, குழந்தையை பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே, செல்போன் டார்ச்சைக் கொண்டு இரவில் சுமார் 2 கிலோமீட்டர் நடந்தே சென்று ஆம்புலன்ஸை அடைந்தார். அதன் பிறகு, ஸ்வாதி மேல் சிகிச்சைக்காக தஸ்மந்த்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், தாய் மற்றும் சேய் இருவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை  வட்டாரங்கள் தெரிவித்தன.