பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்...!

பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்...!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. சரத் பவார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கிளர்ச்சி அணியை உருவாக்கி எம்.எல்.ஏக்களை பிரித்து சென்று ஆளும் சிவசேனா - பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அஜித் பவார், மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக பதவியேற்றார். இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அவருக்கு எதிராக அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார் பேசிய நிலையில், தனி அலுவலகத்தையே அஜித் பவார் தொடங்கினார். இந்த நிலையில் தனது ஆதரவாளர்களை கூட்டி சரத் பவாரையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார். 20 ஆண்டுகளுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கி அதை தலைமையேற்று நடத்தி வந்தவரையே கட்சியில் இருந்து அஜித் பவார் நீக்கியது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கே பேரதிர்ச்சியாக அமைந்தது. 

கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பு வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது. இதனால் சரத் பவார் தரப்புக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 

இதையும் படிக்க : தெலங்கானா: சாதி மறுப்பு திருமணம்; நண்பர்கள் வீட்டை அடித்து உடைத்த பெண்ணின் பெற்றோர்!

இந்த சூழலில் சரத் பவாரை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டு அஜித் பவார் தன்னை தலைவர் என்று கூறுகிறார். உண்மையான தேசியவாத காங்கிரஸ் தாங்கள்தான் என்று கூறி கட்சிப் பெயர் மற்றும் சின்னத்துக்கும் அவர்கள் உரிமைகோரி உள்ளார்கள். அதே நேரம் சரத் பவார் ஆதரவாளர் ஜெயந்த் பாட்டிலும், அஜித் பவார் தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்திடக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அஜித் பவார் தனக்கு 29 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். சரத் பவாருக்கு 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இதில் சில எம்.எல்.ஏக்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த அணிக்கு வேண்டுமானாலும் தாவலாம். அஜித் பவார் தரப்பு வாதத்தை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால், அவருக்கு குறைந்தபட்சம் 36 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் நடவடிக்கையில் இருந்து தப்பலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கு போட்டியாக அஜித் பவாரும் ஆதரவு எம்.எல்.ஏக்கள்  29 பேருடன் இன்று ஆலோசனை நடத்த இருப்பதால், மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.