
குஜராத் மாநிலத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது சிங்க குட்டி ஒன்று பயணிகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது.
குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கவட்கா கிராமத்திற்கு அருகே வனப்பகுதியின் ஷெட்ருஞ்சி பிரிவில் உள்ள மீட்டர் கேஜ் பாதையை கடக்கும் போது, பிறந்து ஆறு முதல் ஏழு மாதமே ஆன சிங்கக்குட்டி ஒன்று, பயணிகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது. இந்த தகவலை துணை வனப் பாதுகாவலர் ஜெயந்த் படேல் உறுதிப்படுத்தினார்.
வெராவலி பகுதியிலிருந்து அம்ரேலிக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது நேற்று இரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இந்த சம்பவம் குறித்து லோகோ பைலட் மற்றும் பிற ஊழியர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, மூன்று குட்டிகளும் ஒரு சிங்கமும் தண்டவாளத்தைக் கடப்பதைக் கண்டதாக கூறிய அவர்கள் இரண்டு குட்டிகளும், ஒரு சிங்கமும் கடந்த நிலையில், ஒரு குட்டி மட்டும் ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், குஜராத் அரசு, 2021 டிசம்பர் மாதம் வரையிலான இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் 283 சிங்கங்கள் மற்றும் சிங்கக் குட்டிகள் இறந்துவிட்டதாகவும், அவற்றில் 29 இயற்கைக்கு மாறான காரணங்களால் இறந்ததாகவும், மாநில சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநிலத்தில் உள்ள ஆசிய சிங்கங்கள் இறப்பதற்கான இயற்கைக்கு மாறான காரணங்களில் ஒன்று ரயில்களில் சிக்குவது தான் ஆகும்.