புதிய மத்திய அமைச்சர்களாக 43 பேர் பதவி ஏற்க வாய்ப்பு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று  விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

புதிய மத்திய அமைச்சர்களாக 43 பேர் பதவி ஏற்க வாய்ப்பு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று  விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் 81 உறுப்பினர்களை உள்ளடக்கிய அவரது மத்திய அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. 53 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பு வகித்து வந்தனர். இதில் முக்கிய அமைச்சர்கள் சிலர், கூடுதலாக 4 துறைகளை கவனித்து வந்தனர். இதன் காரணமாக மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டார். அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று  மாலை 6 மணியளவில் குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஜோதி ராதித்ய சிந்தியா, நாராயன் ரானே, சர்பானந்தா சோனாவால், அனுப்பிரியா பட்டேல், கபில் பட்டில், மீனாக்‌ஷி லேகி, அஜய் பாத், புபேந்திர யாதவ், சுனிதா டக்கல், புருஷோத்தம் ருபூலா, பிரமணிக், ஆர்சிபி சிங், பசுபதி பரஸ் ஆகியோர் வருகை தந்திருந்தனர். 

இதற்கிடையே பிரதமர் மோடி, மூத்த பாஜக தலைவர்களான ஜேபி நட்டா மற்றும் அமித்ஷா ஆகியோருடன் இறுதி அமைச்சரவை பட்டியல் தொடர்பாக ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. 

புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் அனுராக் தாக்கூர், கிஷான் ரெட்டி,  புருஷோத்தமன் ரூபாலா, ஜி கே ரெட்டி ஆகியோருக்கும்  கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.  அதுமட்டுமல்லாது இன்று 43 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஏற்கனவே அமைச்சர் பொறுப்பு வகித்து வந்த  மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, ரமேஷ் பொக்ரியேல், தபஸ்ரீ சவுத்ரி, தாவர்சந்த் கெலாட்  ஆகிய 4 பேர் பதவி விலகியுள்ளனர். 5 மாநில தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும், பாஜக கூட்டணியினருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.