மணிப்பூரில் திடீரென ஏற்பட்ட புதிய கலவரம்...3 பேர் உயிரிழந்த பரிதாபம்!

மணிப்பூரில் திடீரென ஏற்பட்ட புதிய கலவரம்...3 பேர் உயிரிழந்த பரிதாபம்!
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட கலவரத்தில் கிராம தன்னார்வலர்கள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். 

மணிப்பூரில் மெய்தி சமூகத்திற்கும், பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இந்த மோதலில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் காயமடைந்தும் உள்ளனர். இந்த கலவரம் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில், மக்கள் அச்சம் மற்றும் பதற்றத்துடனேயே உள்ளனர். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் என அன்றாட பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூட ஆயுதங்களை ஏந்திய சூழல் காணப்படுகிறது.

இந்த நிலையில், மணிப்பூரில் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் கொய்ஜுமந்தபி கிராமத்தில் புதிதாக வன்முறை பரவியது. இதில், அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பதுங்கு குழியை பாதுகாப்பதற்காக கிராமவாசிகளால் நியமிக்கப்பட்டு இருந்த தன்னார்வலர்களுக்கும், ஆயுதமேந்திய மர்ம நபர்களுக்கும் இடையே நேற்று  துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த கலவரத்தில் கிராம தன்னார்வலர்கள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டும், 5 பேர் காயமடைந்தும் உள்ளனர். அவர்களில் ஒரு தம்பதி படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சூழலில், குகி பழங்குடியினரின் 2 கிளை அமைப்புகள் தேசிய நெடுஞ்சாலை 2-ல் நடத்திய சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக நேற்று கூறியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டு கொண்டதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com