புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்.... சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் பாஜகவினர் 3 பேரை எம்எல்ஏக்கள் நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்.... சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியைப் பிடித்த நிலையில்,  கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து மத்திய பாஜக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரியும் புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. அதில், சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்களை மட்டுமே நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது மோசமானது என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளதாகவும், இவர்கள் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் வாதிட்டனர்.

மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்த மனுவை ஏற்க கூடாது என நியமன எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தனர்.