உக்ரைனில் தவித்த 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அவர்களை மீட்கும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் தவித்த 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் போபண்ணா, ஹிமா கோஹ்லி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் பேசுகையில், மத்திய அரசின் விரைவான நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனில் இருந்து 17 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர் என்றும், மீதமுள்ள 7 ஆயிரம் பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கு எந்த வாய்ப்பையும் மத்திய அரசு தவற விடாது என்பதையும் உறுதிபட கூறினார்.  
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள்,  உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் குறித்து கவலை அளிப்பதாகவும், அவர்களை மீட்கும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.