அடுத்த 5 ஆண்டுகளில் 12 பில்லியன் டாலர் வர்த்தகமாக உயர்த்த முடிவு...!

அடுத்த 5 ஆண்டுகளில் 12 பில்லியன் டாலர் வர்த்தகமாக உயர்த்த முடிவு...!

அடுத்த 5 ஆண்டுகளில் எகிப்து உடனான இருதரப்பு வர்த்தகத்தை 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தடைந்த எகிப்து அதிபர் அப்டெல் ஃபெட்டா எல்-சிசிக்கு முன்னதாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் எகிப்து அதிபரும், பிரதமர் மோடியும் பங்கேற்றனர். அப்போது இணைய பாதுகாப்பு, கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையும் படிக்க : தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு...!

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா பரவலின்போது இருநாடுகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைப்புடன் செயல்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 12 பில்லியன் டாலர்களாக உயர்த்த முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய எகிப்து அதிபர், இந்தியாவும் எகிப்தும் மிகப்பழமையான நாகரீகங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் மிளிர்வதாக குறிப்பிட்டார். பயங்கரவாதம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் முன்னேற்றம், வர்த்தக முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பெரும் வரவேற்பை அளித்த இந்தியாவிற்கு நன்றி எனவும் அவர் கூறினார்.