விதிமுறைகளை மீறி பிக்பாஸ் ஷூட்டிங்.. சீல் வைத்து அதிரடியாக செயல்பட்டது வருவாய் துறை!!

விதிமுறைகளை மீறி பிக்பாஸ் ஷூட்டிங்.. சீல் வைத்து அதிரடியாக செயல்பட்டது வருவாய் துறை!!

பூந்தமல்லியில் உள்ள பிக்பாஸ் செட்டில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஷூட்டிங் நடைபெற்றதால், வருவாய் துறையினர் அதிரடியாக செயல்பட்டு கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென பிரத்யேகமாக செட் அமைக்கப்படுவது உண்டு. தற்போது மலையாள பிக்பாஸுக்கான ஷூட்டிங் இந்த அரங்கில் நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழக்குகிறார்.

கடந்த வாரம் இந்த அரங்கில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 6 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர்கள் தங்களை தனிமை படுத்திக்கொண்டனர். அதுமட்டுமல்லாது, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் வருகிற மே.31ம் தேதி வரை சினிமாவோ அல்லது டிவி சீரியல் ஷூட்டிங்கோ நடக்காது என பெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சன், மற்றும் பூந்தமல்லி தாசில்தார் சங்கர் ஆகியோர் படப்பிடிப்பு செட்டுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். அங்கு நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து ஊரடங்கு நடைமுறையை மீறியதாக சம்பந்தப்பட்ட அரங்கிற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட ஆட்சியருடன் நடத்திய ஆலோசனைக்கு பின், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத மலையாள பிக்பாஸ் அரங்கினை சீல் வைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் அரங்கின் 3 பக்க நுழைவாயிலுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் 7 பேர் கொரோனா கவச உடையுடன் வேறு இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டு, அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் படப்பில் இருந்த 60க்கு மேற்பட்ட ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.