”பாலன் தன் அம்மா பெயரையும் சேர்ந்து கொண்டு வசந்தா பாலனாவேன்”- இயக்குனரின் நெகிழ்ச்சி பதிவு!

”பாலன் தன் அம்மா பெயரையும் சேர்ந்து கொண்டு வசந்தா பாலனாவேன்”- இயக்குனரின் நெகிழ்ச்சி பதிவு!

"நரை வந்த பின்பும் அம்மாவின் கைகளில் குழந்தையாய் கிடக்க, இந்த முருகேசன்கள் ஏன் தான் இத்தனை ஏங்குகிறார்களோ ?" எனவும் , இயக்குநர் பாலன், வசந்த பாலன் ஆனது எப்படி? எனவும் இயக்குநர் வசந்தபாலன் நெகிழ்ச்சியுடன் முகநூலில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வெயில், அரவான், அங்காடி தெரு என தமிழ்சினிமாவின் முக்கிய படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலனுக்கு, அந்த பெயர் வந்தது  எப்படி என்றும் அவரது தாயுடனான உரையாடலை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றை படிக்கும் போது வெள்ளந்தி மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று மனத்திரையில் காட்சிகள் ஓடுவது போல எழுத்துகளால் வசீயப்படுத்தியுள்ளார் வசந்த பாலன்.

வெயில் உக்கிரமாக தாண்டவமாடும் காடு,மலை,மேடு, கந்தக நிலம் என கடந்த இருபத்தி நான்கு நாட்களாக படப்பிடிப்பை முடித்துவிட்டு, அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசையில் சொந்த ஊர் கிளம்பினேன். 

வா பாலா என்று (நிஜ அன்பு பெருகிய வண்ணம் அம்மா கைப்பிடித்து வரவேற்றாள்). 

என்ன இப்டி ரொம்ப கருத்திட்ட? சூட்டங்கில ஒரு தொப்பி போட்டுக்கக் கூடாது, என்றாள் 

போட்டிருந்தேன்மா ஆனா வெயில் அந்த மாதிரி, என்றேன். 

பாலன் எப்பயும் கருப்பு தான?….என்னமோ நவாப்பழம் சிவப்பு மாதிரி பேசுற வசந்தா? என்றாள் குருவம்மா கிழவி

சின்ன புள்ளலே, என் புள்ள என்ன கலரா இருப்பான் தெரியுமா ? மெட்ராஸூக்கு போயி தான் கருத்திட்டான் என்று, அம்மா வெடுக்குன்னு வீட்டிற்குள் என்னை அழைத்து சென்றாள்.

பாலாப்பைய பொறந்தப்ப செவப்பாயிருப்பான், ஆனா நான் குஞ்சாமணி கருத்து கிடந்ததப் பாத்து டக்குன்னு இவன் கருப்பாத் தான் வருவான்னு சொன்னேன். அன்னிக்கும் வசந்தா கோவிச்சுக்கிட்டா…என்ன செய்ய கருப்புங்கிறது நம்ம பக்க ராசா நெறந்தானா ? என்று குருவம்மா கிழவி தெருவில் பொறணி பேசியவண்ணம் இருந்தாள்.

என்ன சாப்பிடுற பாலா? என்றாள் அம்மா.

வெயில்ல சாப்பிடவே பிடிக்கலம்மா. சரியான சாப்பாடு இல்லை. சரியான உறக்கமில்லைம்மா.

இப்படி அலைஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆகிறது?. நல்லா படிச்சிருந்தா பேனுக்கு கீழ உக்காந்துட்டு உங்க அப்பா மாதிரி கவர்மெண்ட் ஜாப் பாத்திருக்கிலாம் எங்க சொல்பேச்சு கேட்ட ? என அம்மா கூற, அப்பா மாதிரி இருக்கவேண்டாம்னு தான் நெனச்சேன்ம்மா…பேனுக்கு கீழ வேலை பாக்க வேண்டாம்ன்னு தான் வெயிலுக்கு கீழ வேலை பாக்கிறேன்.புடிச்ச வேலைய செய்றேன், என்றேன்.

எதித்து எதிர்த்து பேசு, என்றாள் அம்மா.

சரி குளிச்சிட்டு வா என சொல்லி பீரோவில் புதிதாக வாங்கி வைத்திருந்த கோ-ஆப்டெக்ஸ் டவலை 
ஸ்டிக்கர் பிரியாமல் கையில் எடுத்து தந்தாள். அப்பாவின் கைலியை மாற்றி கொண்டு பாத்ரூமில் குளிக்க சென்றேன்.

குளித்துவிட்டு வந்தேன். அம்மா கடுமையான முட்டி வலியுடன் பரபரப்பாக வீட்டிற்குள் அங்குமிங்கும் அலைந்தாள். பக்கத்து வீட்டுக்கார அக்காக்களிடம் மாறி மாறி வேலை சொன்னபடி இருந்தாள்.

முட்டி வலி எப்படிமா இருக்கு ? என்றேன்.

அது கெடக்கு, நடந்தா வீங்குதுன்னு படுத்தா, சரியா ஆகுது. அதுக்குன்னு படுத்தே கெடக்க முடியுமா?

சித்திரை விசூக்கு ஐயப்பன் கோயில் போனேன் என்று அப்பா விபூதி சந்தனம் குங்குமம் நீட்ட, நெற்றியில் வைத்துக்கொண்டு விருதுநகர் பாலனாய் சாப்பாடு மேஜையில் அமர்ந்தேன்.
 
ஆப்பம் மற்றும் தேங்காய்ப்பால் என் தட்டில் விழுந்தது. தேங்காப்பாலை வெறும் வயித்துல கொஞ்சம் குடி, சூடு கொஞ்சம் கொறையும்.வயித்துப்புண்ண ஆத்தும்" என்றாள் அம்மா.
 
இரண்டு மூன்று என்று ஆப்பம் உள்ளே இறங்கிய வண்ணம் இருந்தது. வேண்டாம், வேண்டாம் என்று மறுத்தும் நாலாவது ஆப்பத்தை அம்மா தட்டில் வைத்தாள். சாப்பிட்டுவிட்டு, கை கழுவி எழுந்து என் அலைபேசியை நோண்டியவாறு மெல்ல படுக்க சென்றேன்.
 
இன்னிக்காவது நல்லா தூங்கணும் என்று, அலைபேசியை அணைத்துவிட்டு கண்களை மூடினேன். 

பாலா உள்பாதத்துல தேங்கா எண்ணைய்ய தேய்ச்சுட்டு படுத்தா நல்லா தூக்கம் வருமாம் , வாட்ஸ்அப்ல பாத்தேன், என்றாள் அம்மா.
 
பரவாயிலம்மா, நானே தேய்ச்சுகிறேன், என்றேன். எவ்வளவோ கெஞ்சியும் மறுத்து, அவளே தேய்க்கத் துவங்கினாள். 70 வயதைக் கடந்த அம்மா என் பாதங்களைத் தூக்கி அவள் மடியில் வைத்து தேங்கா எண்ணெய்யை இரு பாதங்களிலும் ஒழுக ஒழுக தேய்த்து விட்டாள். பெருவிரல் தொடங்கி அத்தனை விரல்கணுக்குகளிலும் எண்ணெய் வைத்தாள். 

நரை வந்த பின்பும் அம்மாவின் கைகளில் குழந்தையாய் கிடக்க இந்த முருகேசன்கள் ஏன் தான் இத்தனை ஏங்குகிறார்களோ ?

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாலன் தன் அம்மா பெயரையும் சேர்த்து கொண்டு வசந்தா பாலனாவேன். மெல்ல கண்கள் கண்ணீரில் நீந்தியது. நிம்மதியான உறக்கத்திற்குள் நுழைந்தேன்

வாழ்வின் எத்தனை துயரத்திலும் இளைப்பாற கிடைக்கும் அன்பு இந்த உலகத்தை ஒரு துளி மழையாய் வெட்டி செல்கிறது, என நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.