தூது அனுப்ப லைவ் லொகேஷன் கேட்ட வந்தியத்தேவன்; மறுத்த குந்தவை இளவரசி:

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், நடிகர் கார்த்தியும், நடிகை திரிஷாவும் ட்விட்டர் பதிவிட்டு பேசிவந்தது இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது.  
தூது அனுப்ப லைவ் லொகேஷன் கேட்ட வந்தியத்தேவன்; மறுத்த குந்தவை இளவரசி:
Published on
Updated on
2 min read

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன்- 1 திரைப்படம் பல நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம். 1950 களில் ஒரு பத்திரிகை தொடராக வெளிவந்த கல்கியின் புகழ்பெற்ற நாவல் தான் பொன்னியின் செல்வன். இந்த நாவலை அடிப்படையாக கொண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம். முன்னதாக இந்த பொன்னியின் செல்வன் கதையை படித்து வியந்த எம்.ஜி.ஆர், அதனை படமாக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அது நடக்கவில்லை. மேலும் இதே போன்று நடிகர் கமல்ஹாசனும் இந்த படத்தை இயக்க முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

லைக்கா ப்ரோடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் அவர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களையும் படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்துள்ளனர்.   

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என பல மொழிகளில்  வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு விழா நாளை(ஜூலை 8 ) மாலை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைப்பெற உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் ஹிந்தி டீசரை நடிகர் அமிதாப் பச்சனும், மலையாள டீசரை நடிகர் மோகன்லாலும், தெலுங்கு டீசரை மகேஷ் பாபுவும் வெளியிடுகின்றனர். 

இந்நிலையில் நடிகை திரிஷா, அவரது ட்விட்டர் பக்கத்தில், ஆண்களின் உலகில், தைரியமான பெண். குந்தவை இளவரசி  என ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதில் ட்வீட் செய்த நடிகர் கார்த்தி,  இளவரசி, தயவு செய்து லைவ் லொகேஷனை எனக்கு அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை ட்ராப் ஆஃப் பண்ணனும் என பதிவிட்டிருந்தார். அதற்கு மீண்டும் பதிலளித்த திரிஷா, அரண்மனையில் ஸ்மார்ட் போன்ஸ்  அனுமதி இல்லை என பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த பதிவு இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com