
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஷால் ’செல்லம்மே’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் அனைத்தும் ஆக்ஷன் கலந்த குடும்ப திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வீரமே வாகை சூடும்’. இந்த படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் ஜனவரி 26ஆம் தேதியன்று ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. விஷால் மீண்டும் காவல் துறை அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
இந்த டிரைலரில் வந்த ஒருசில வசனங்களில் இருந்தே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ’சண்டை போடலைன்னா நம்மளையும் கொன்னுருவாங்க’ என்ற வசனம் இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.