புதுச்சேரி பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி-நடிகர் விஜய் சந்தித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதால்..அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

புதுச்சேரி பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி-நடிகர் விஜய் சந்தித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதால்..அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி-விஜய் சந்தித்த புகைப்படம் இடம்பிடித்துள்ளது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார், இந்த சந்திப்பு புதுச்சேரி அரசியல் கட்சியனரிடயே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில விஜய் மக்கள் இயக்க தலைவருமான புஸ்சி ஆனந்த் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் பலமுறை சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றார்.

இந்நிலையில் வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ள நிலையில் இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரமாண்ட கட்அவுட் - பேனர்கள் வைத்துள்ளனர்.

ரசிகர்கள் வைத்துள்ள பெரும்பாலான பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி படமும், சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி விஜயை சந்தித்த படமும் இடம்பெற்றிருப்பது புதுச்சேரி அரசியல் கட்சியினரிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.