வெந்து தணிந்தது காடு படத்தின் அமோக வெற்றி...! பரிசுகளை வாரி வழங்கிய தயாரிப்பாளர்..!

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்காக சிம்புவுக்கும், இயக்குனர் கௌதம் மேனனுக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசுகளை வழங்கி கொண்டாடியுள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் அமோக வெற்றி...! பரிசுகளை வாரி வழங்கிய தயாரிப்பாளர்..!

ரொமான்டிக் ஹீரோ என்று சொல்வது போல் ரொமான்டிக் இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு திரைப்படம். செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாணடமாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.

ஒரு சாதாரண, தமிழகத்தை சேர்ந்த இளைஞன் வேலைக்காக மும்பை சென்று அடிதடியில் சிக்கி எப்படி டான் ஆகிறான் என்பதே படத்தின் கதைக்கரு. இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.10.86 கோடி வசூல் செய்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். மேலும் படத்தின் பாடல்கள் படு ஹிட்டாகின. அதிலும் குறிப்பாக மதுஸ்ரீ பாடிய 'மல்லிப்பூ' பாடல் ட்ரெண்டாகி பலரது வாட்ஸப் ஸ்டேட்டஸ் ஆகவும் இன்ஸ்டகிராம் ரீல்ஸ் ஆகவும் உள்ளது. 

இந்நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளரான வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் சிம்புவுக்கும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும், பரிசுகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் நடிகர் சிம்புவுக்கு, ரூ. 92 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா வெல்பையர் ரக சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார். அதே போல், இயக்குனர் கௌதம் மேனனுக்கு பைக் மிகவும் பிடித்தமான ஒன்று என்பதால், ராயல் என்பீல்டு பைக் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போன்று முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படத்தின் வெற்றிக்காக, நடிகர் கமல்ஹாசன் சொகுசு கார் ஒன்றை இயக்குனர் லோகேஷுக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.