மோகனின் ‘ஹரா’ படக்குழுவினர் தமிழக முதலமைச்சரிடம் வைத்த கோரிக்கை என்ன? பரிசீலனை செய்வாரா முக ஸ்டாலின்?

மோகனின் ‘ஹரா’ திரைப்படத்தின் படக்குழுவினர் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மோகனின் ‘ஹரா’ படக்குழுவினர்  தமிழக முதலமைச்சரிடம் வைத்த கோரிக்கை என்ன? பரிசீலனை செய்வாரா முக ஸ்டாலின்?

தமிழ் சினிமாவில் கடந்த 80 மற்றும் 90 - களில் பிரபல ஹீரோவாக நடித்தவர் நடிகர் மோகன். இவர் கமல்ஹாசன் நடித்து வெளியான கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக நடித்தவர் மோகன். இருப்பினும் தமிழ் திரைப்படங்களினால் தான்  அனைவருக்கும் பரீட்சையமானார். அதன்படி தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள மோகனுக்கு, ’பயணங்கள் முடிவதில்லை’, ’இளமை காலங்கள்’, ’மௌனராகம்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது.

இப்படி பல ஹிட் படங்களை கொடுத்து வந்த மோகன் சினிமா துறையை விட்டு நீண்ட காலம் விலகியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் ’ஹரா’ என்ற திரைப்படத்தில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் நடிகர் மோகன்.  இவருக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடித்துள்ள இந்தப்படம் தந்தை மகள் சென்டிமென்ட் கொண்ட படம் என்றும், பெண் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற ஒரு சாதாரண மனிதனின் கோபம் தான் இந்த படத்தின் மையப் புள்ளி என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ’ஹரா’ படக்குழுவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

அதாவது, பெண்களுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஸ்பெயின் நாட்டில் இது போன்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகமும் மூன்று நாட்கள் விடுமுறை அளித்து நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்த படக்குழுவினர், ‘ஹரா’ படத்தில் நடிகர் மோகன் தனது மகளுக்காக மூன்று நாட்கள் பள்ளி நிர்வாகத்திடம் விடுமுறை கேட்கும் காட்சி இருப்பதையடுத்து இந்த கோரிக்கை முதலமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சர் நிச்சயம் பரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.