எதன் அடிப்படையில் நடிகர் விஜய்யின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டது - உயர்நீதிமன்ற கேள்விக்கு திக்குமுக்காடி போன வணிக வரித்துறை

எதன் அடிப்படையில் நடிகர் விஜய்யின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டது - உயர்நீதிமன்ற கேள்விக்கு திக்குமுக்காடி போன வணிக வரித்துறை

அமெரிக்காவில் இருந்து நடிகர் விஜய், இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ. காருக்கு எதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது? என வணிக வரித்துறை விளக்கம் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2005ஆம் ஆண்டு, அமெரிக்காவிலிருந்து 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5 காரை, நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இதற்கு நுழைவு வரி செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது.

அதன் பிறகு 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்ட நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதத்திற்கு கணக்கிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

அதன்படி தாமதித்த காலத்திற்கான அபராதமாக  30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ல் நடிகர் விஜய்க்கு வணிக வரித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி, எதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என ஆவணங்களை தாக்கல் செய்ய வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டது. 

அதுவரை அபராத தொகையை செலுத்துமாறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாமெனவும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.