பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார்...!

பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார்...!

பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன், பல்வேறு தமிழ் திரைப்படங்களை இயக்கியும், சில திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். புகழ்பெற்ற நடிகை டி. பி. முத்துலட்சுமியின் மகனான இவர், விசுவின் உதவியாளராக பணியாற்றி பிறகு அவரைப்போலவே, குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட பாட்டு வாத்தியார், மிடில் கிளாஸ் மாதவன், பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி வந்தார். 

ஆனால், கடந்த சில நாட்களாகவே டி.பி.கஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 3 ஆம் தேதி தான் வீடு திரும்பியுள்ளார். 

இதையும் படிக்க : இல்லந்தோறும் ஒலித்த குரல்...இன்று சென்னை பெசன்ட் நகரில்...!

இந்நிலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் டி.பி.கஜேந்திரன் வீட்டிலேயே காலமானார். இதனைத்தொடர்ந்து சென்னை வடபழனியில் அவரது இல்லத்தில் உள்ள டி.பி.கஜேந்திரன் உடலுக்கு நடிகர்கள் மனோ பாலா, ராதா ரவி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், மறைந்த டிபி கஜேந்திரனின் உடல் நாளை வடபழனியில் உள்ள ஏவிஎம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.